வேலூர்

பலமநேரில் செல்போன் மூலமாக, வங்கி மேலாளர் பேசுவது போல பேசி, ஏ.டி.எம். அட்டையின் நம்பரை கேட்டு 2 பேரிடம், மர்மநபர்கள் ரூ.1 இலட்சத்தை வங்கிக் கணக்கில் இருந்து திருடியுள்ளனர்.

பலமநேர் மண்டலம் மண்டிபேட்டை கோட்டூரைச் சேர்ந்தவர் விநாயகா. இவரின் சேமிப்பு கணக்கு பலமநேரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளது. அவரின் சேமிப்பு கணக்கில் ரூ.44 ஆயிரம் ரொக்கம் இருப்பு இருந்தது. அவரின் செல்போனுக்கு கடந்த 11–ஆம் தேதி மர்ம அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசியவர், நான் பலமநேர் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன், உங்களின் ஏ.டி.எம்–யை பயன்படுத்தும் காலம் முடிந்து விட்டது, எனவே, புதிய ஏ.டி.எம். கார்டு வழங்குகிறோம், அதற்காக தங்களின் பழைய ஏ.டி.எம். கார்டு நம்பர், ரகசிய எண் ஆகியவற்றை கூறுங்கள் என்று கேட்டு தகவல்களை வாங்கி கொண்டார். அவர் கேட்ட தகவல்களை, விநாயகா செல்போன் மூலமாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை பலமநேரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்ற அவர், தனது சேமிப்பு கணக்கின் இருப்பு நிலையை பார்த்துள்ளார். அப்போது அவரின் சேமிப்பு கணக்கில் பணம் இருப்பு இல்லை எனத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதேபோல் பலமநேர் – குடியாத்தம் சாலையில் வசித்து வருபவர் நாகார்ஜுனா. இவர், பலமநேரில் உள்ள ஆந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் அவரின் செல்போனுக்குத் தொடர்பு கொண்ட மர்மநபர், நான் ஆந்திரா வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன் என்று கூறி, அவரின் ஏ.டி.எம்.நம்பர், ரகசிய எண் ஆகியவற்றை கேட்டுள்ளார்.

அவர் கேட்ட தகவல்களை நாகார்ஜுனா கூறியதும், அடுத்த நிமிடமே அவரின் சேமிப்பு கணக்கில் இருந்து 57 ஆயிரம் ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி தகவல் செல்போனுக்கு வந்தது. அதனை பார்த்தும் அவர் அதிர்ச்சி அடைந்தார்,

இதுபற்றி பலமநேர் ஆந்திரா வங்கி மேலாளரிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக, வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.