கோயம்புத்தூர்

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்தரக் கூடிய அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் 'அக்ரி இன்டெக்ஸ் 2017' வேளாண் வணிகக் கண்காட்சியின் விழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கொடிசியா தலைவர் வி.சுந்தரம், கண்காட்சியின் தலைவர் ஆர்.செளந்தரராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் த.ந.அரிகரன், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், “விவசாயிகளுக்காக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.

மேற்கு மண்டல விவசாயிகள் மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் உள்ள தென்னை விவசாயிகள் பயன்பெறக் கூடிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ள நீரா பானம் திட்டம், குடிமராமத்து திட்டம் போன்றவற்றை அனைவரும் பாராட்டுகின்றனர்.

நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து வயல்களில் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு உரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட இடுபொருள்கள் பயன்படுத்தும் செலவு குறைகிறது.

குடிமராமத்துத் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து இருப்பதால் நீர் கொள்ளளவு அதிகரிப்பதுடன், விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும். இந்தத் திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளங்களில் நீர் நிரப்பி அதன் மூலம் நிலத்தடி நீரைச் செறிவூட்டும் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை மூன்று மாவட்ட விவசாயிகளும் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தத் திட்டம் குறித்து அறிக்கை தயாரிக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருப்பதால், இந்தத் திட்டத்தின் அவசியத்தை உணர்ந்து ரூ. 250 கோடியை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளார். இந்தத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிகள் மூலம் தொழில் நகரமாக உள்ள கோவை, வேளாண்மையிலும் சிறந்த நகரமாக உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று பேசினார்.

இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கனகராஜ், எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.