நாடு முழுவதும் நேற்று அட்சய திருதியை கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரம் கிலோ தங்கம்  வின்பனையாகி சாதனை படைத்துள்ளது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது.  அதிர்ஷ்டம் தரும் நாளாக கருதப்படும் இந்த அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

 இதனால், அந்த நாளில் ஒரு கிராம் தங்க நகையாவது வாங்கிவிடவேண்டும் என்று பெரும்பாலானோர் நினைப்பது உண்டு. அந்தவகையில் அட்சய திருதியை தினமான நேற்று நகைகள் வாங்குவதற்கு சென்னை நகரில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காலை முதலே நகைக்கடைகளில் பெண்கள் குவியத்தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. தங்க நாணயம் மட்டும் வாங்க வருபவர்களுக்கு வசதியாக சில நகைக்கடைகளின் முன்பு சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் வரிசையாக நின்று தங்க நாணயங்களை வாங்கிச்சென்றனர்.

சில இடங்களில் கடைகளில் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நகைகள் வாங்கிவிட்டு வெளியே வந்ததும், வெளியே நின்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சந்தேகப்படும் நபர்களை கண்காணிப்பதற்காக நகைக்கடைகள் சார்பிலும், போலீசார் சார்பிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் நகைக்கடைகள் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.

ஏராளமான புதிய டிசைன் நகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நகைக்கடை உரிமையாளர்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் தள்ளுபடி அறிவித்திருந்தனர். இரவு வரையிலும் வியாபாரம் நடந்தது.

சில கடைகளில் நேற்று தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை குறைத்து விற்கப்பட்டது. சில கடைகளில் தங்க நகைகள் வாங்கியதற்கு ஏற்ப பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.

நகைக்கடைகளை போன்று வீட்டு உபயோக பொருட்கள், செல்போன் கடைகளிலும் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.

நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 778-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 824-க்கும் விற்பனையானது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது.

அட்சய திருதியையொட்டி தமிழகம் முழுவதும்நேற்று  6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.