கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது 2 ஆவது மாடியில் இருந்து பயந்து கொண்டு குதிக்க மறுத்த மாணவியை பயிற்சியாளர் கீழே தள்ளிவிட்டதால் அந்த  மாணவி தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது.

இதில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போதோ கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது  எப்படி என்பது குறித்து  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி பெறுவதற்காக மாணவிகள்  வரிசையாக 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். மாடியில் இருந்து குதித்தால் அவர்களை காப்பாற்றுவதற்காக கீழே வலைகளை விரித்துப் பிடித்தபடி சில மாணவர்கள் காத்திருந்தனர்.

இந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி என்ற மாணவியும் இதில் பங்கேற்றார். அவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க மிகவும் பயந்து கொண்டு தயக்கம் காட்டினார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பயிற்சியாளர் , மாணவியை தைரியமாக குதிக்கச் சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் தொடர்ந்து லோகேஸ்வரி  தயக்கம் காட்டியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பயிற்சியாளர் மாணவியின் கையைப் பிடித்து கீழே  தள்ளிவிட்டார்.  அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் பலமாக இடித்து பின்னர்  வலையில் விழுந்தார்.

இந்த சம்பவத்தில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் லோகேஸ்வரி போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.