தனது 5 வயதிலேயே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்களே பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகை பார்வதி, இந்த விருதுக்காக தான் வெட்கப்படுவதாகவும், ஆசிஃபாவின் இறப்புக்கு நீதி வேண்டும் எனவும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதே போன்று நாடு முழுவதும் சிறு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ், இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் 5 வயது குழந்தையாக இருந்த போதே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தை தான் யாரால் எதற்காக தொடப்படுகிறோம், தொடுபவரின் நோக்கம் என்ன என்பது குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இந்த விழிப்புணர்வை குழந்தையின் பெற்றோர்களே அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என நிவேதா பெத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.