ஒரு டன் நெகிழி குப்பைகளை அரைத்து துகள்களாக மாற்ற ரூ.3 இலட்சம் செலவில் இயந்திரமும், ரூ.21 இலட்சம் செலவில் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சங்கர் தெரிவித்தார்.
அழுகுக்கு பெயர் பெற்ற மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது. இங்கு நெகிழிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
இங்கு சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஏராளமான நெகிழிகளை விட்டுச் செல்கின்றனர்.
இந்த நெகிழிகளை அரைத்து துகள்களாக மாற்றும் இயந்திரம் அமைக்கும் பணி ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இதற்கான பணி முடிவடைந்து மாவட்ட ஆட்சியர் சங்கர் தலைமையில் இயந்திரத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
“ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் நாளொன்றுக்கு மொத்தம் 38 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 26 டன் மக்கும் குப்பையும், 11 டன் பிற குப்பைகளும், 1 டன் அளவிற்கு நெகிழி குப்பைகளும் கிடைக்கிறது.
இதில் மக்கும் குப்பைகளில் இருந்து 5 டன் அளவிற்கு காய்கறி கழிவுகள் கிடைக்கிறது. இந்த காய்கறி கழிவுகளில் இருந்து பயோ கியாஸ் உற்பத்தி செய்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஊட்டி நகராட்சியில் சேகரமாகும் 1 டன் நெகிழி குப்பைகளை அரைத்து துகள்களாக மாற்ற ரூ.3 இலட்சம் செலவில் இயந்திரமும், ரூ.21 இலட்சம் செலவில் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அரைக்கப்பட்ட நெகிழித் துகள்களை பெற்றுக் கொள்ள ஐ.டி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த நெகிழிகளை மறு சுழற்சிக்கு பயன்படுத்தி கொள்வார்கள்.
இதற்காக ஊட்டி நகராட்சியில் உள்ள 9-வது வார்டு முதல் 18-வது வார்டு வரை உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகளிடம் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தரும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படும். மக்கும் குப்பைகள் தீட்டுக்கல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உரம் தயாரிக்கப்படும்” என்று அவர்த் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) டாக்டர் பிரபாகர், ஆர்.டி.ஓ. கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
