ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்பல்லோ நிர்வாகம், மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வந்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24 ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது.

அதன் பின்னர் அடுத்தடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வருவது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. அதையடுத்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கான கால அவகாசம் கடந்த ஜனவரி மாதம் 12வது முறையாக நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. 2017 ஆம் ஆண்டு பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இதுவரை மொத்தம் 156 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக நடந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 24ஆம் தேதியோடு ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கடைசியாக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைய இருக்கும் நிலையில், மேலும் 1 மாதம் 7 நாட்கள் அவகாசத்தை நீட்டிக்கக்கோரி ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
