தேனி

போலீஸ் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டபோட்ட பெண் மற்றும் உடந்தையாக இருந்தவர் என மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டனர். 

தேனி மாவட்டம், கம்பம் அருகே குள்ளப்பகௌண்டன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சாமி (36). இவர், கம்பத்தில் கிராமச்சாவடி தெருவில் விளையாட்டு ஆடை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். 

இவரும், அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த சுகந்தி (32) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சய் (13) என்ற மகன் உள்ளார். 

இந்த நிலையில் சுகந்திக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் (39) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர், இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் காவலராக இருந்து வருகிறார்.

கடந்த 18-ஆம் தேதி சுகந்தி வைத்திருந்த செல்போனை எடுத்து சாமி பார்த்துள்ளார். அப்போது தனது மனைவி கள்ளக் காதலில் ஈடுபடுவதும், அவருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டம் போட்டதும் தெரியவந்தது.

தனது மனைவி, கள்ளக் காதலனுடன் பேசிய உரையாடல் அந்த செல்போனில் தாமாகவே பதிவாகி இருந்தது. இது பற்றி சுகந்திக்கு தெரியவில்லை. அந்த உரையாடலை கேட்ட சாமி அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் சாமி புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஷாஜகான், உதவி ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். 

பின்னர் சுகந்தி, சுதாகர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கூடலூர் எல்லை தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன் (31) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய பெண் திட்டமிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.