திருபெரும்புதூர்,

வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற துணைத் தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருபெரும்புதூரை அடுத்த தண்டலம் ஊராட்சியை சேர்ந்தவர் சசிகுமார். ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், தே.மு.தி.க ஒன்றிய அவைத் தலைவராகவும் உள்ளார். கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக 30–9–2016 அன்று காலை தன்னுடைய ஆதரவாளர்களுடன் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு தயாரானார்.

அப்போது மர்மநபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டை சசிகுமார் மீது வீசி கொல்ல முயன்றார். அந்த வெடிகுண்டு வீட்டின் எதிரே விழுந்து வெடித்து சிதறியது. சசிகுமார் உள்பட அங்கு இருந்தவர்களுக்கு ஏதும் நேராமல் உயிர் தப்பினார்கள்.

இது குறித்து திருபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சசிகுமாரின் வீட்டுக்கு காவலாளர் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் 1.10.2016 அன்று 2–வது முறையாக சசிகுமாரின் வீட்டு காம்பவுண்டுக்கு வெளியே இருந்தபடி மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை உள்ளே வீசினர். அது வெடித்து சிதறியதில் அங்கு காவலுக்கு அமர்ந்திருந்த காவலர் ட்டு பாபுவின் கால், கைகளில் காயம் ஏற்பட்டது.

காவல்துறை விசாரணையில் தண்டலம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (35) வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரித்தனர்.

தேர்தலில் சசிகுமார் போட்டியிடுவதை தடுக்க வெடிகுண்டு வீசியதாக பாஸ்கர் ஒப்புக்கொண்டார்.

காவல்துறையினர் பாஸ்கரை கைது செய்து திருபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.