நாமக்கல்

தொழிலதிபர்களுக்கு விற்பதற்காகவே ரூ.3 இலட்சம் மதிப்பிலான 370 உயர்ரக சாராய பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து திருச்செங்கோட்டுக்கு கடத்தி வரப்பட்டு அங்குள்ளா வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். சாராய பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் இருந்து உயர் ரக சாராய பாட்டில்களை கடத்திவரப்பட்டு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவை முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு காவலாளர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதன்னையடுத்து மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் உத்தரவின்பேரில், திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ மேற்பார்வையில், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை காவலாளர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தனிப்படை காவலாளர்கள் ஒரு செல்போன் எண் மூலம் சாராய பாட்டில்களை விற்பனை செய்பவருக்கு போன் செய்து, வாடிக்கையாளர் போல நடித்து, தங்களுக்கு பத்து உயர் ரக சாராய பாட்டில்கள் வேண்டும். அவற்றை பரமத்தி வேலூர் பகுதிக்குக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டனர்.

இதை தருவதாக ஒப்புக்கொண்ட அவர் சாராய பாட்டில்களை பரமத்தி வேலூர் பகுதிக்கு தனது உதவியாளர்கள் மூலம் அனுப்பி வைத்தார்.

அங்கு தனிப்படை காவலாளர்கள் அந்த சாராய பாட்டில்களை வாங்கிக் கொண்டு, பணமும் கொடுத்தனர். பின்னர் சாராய பாட்டில்களை கொண்டுவந்த கும்பலிடம் பேச்சு கொடுத்தவாறே, சாராய பாட்டில்கள் எங்கிருந்துக் கொண்டு வரப்படுகிறது? எங்கு வைத்து விற்பனை செய்யப்படுகிறது? என்றுக் கேட்டுத் தெரிந்துக் கொண்டனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்படி, திருச்செங்கோடு நகரில் மலையடிவார பகுதியில் உள்ள செம்படையர் மடம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரூ.3 இலட்சம் மதிப்பிலான 370 உயர்ரக “புல்” சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அங்கு சாராய பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த சக்திவேல் மகன் ஜெகதீசன் (31) என்பவரை கைது செய்து திருச்செங்கோடு சாராய விலக்கு காவல் நிலையத்திற்குக் கொண்டுச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பல மாதங்களாக புதுச்சேரியில் இருந்து திருச்செங்கோட்டுக்கு சாராய பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.