நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில், ராமன் படத்தை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெ.சுவாமிநாதன், மாவட்டப் பொதுச் செயலாளர் ஆறு.பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் கடந்த 20-ஆம் தேதி ஒரு சில அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது. 

இந்தப் போராட்டத்தில் ராமனின் படத்தை மிக மோசமாக அவமதித்துள்ளனர்.

பெரியார் சிலை உடைப்புக்கும், ராமனுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாத நிலையில், ராமனின் படம் அவமதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க நிர்வாகி த.ஜெயராமன், தமிழர் உரிமை இயக்க நிர்வாகி சுப்பு.மகேசு, திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி இளையராஜா உள்ளிட்ட 14 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொண்டனர்.