Asianet News TamilAsianet News Tamil

சிறை அனுபவித்தது போதும்...! என் மகனை விட்டுடுங்க... கண்கலங்கிய பேரறிவாளன் தாய்...

arputhammal said please release my son perarivalan
arputhammal said please release my son perarivalan
Author
First Published Nov 16, 2017, 4:48 PM IST


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடித்து படுகொலை செய்யப்பட்டார்.  

இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

இவர்கள் 7 பேரும் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் பேரறிவாளனை பரோலில் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு அடிக்கடி மனு செய்து வந்தார். 

இதையடுத்து கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், பரோலில் ஒரு மாத காலத்திற்கு விடுவிக்கப்பட்டார். 

இதைதொடர்ந்து பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை சரியில்லாததால், மேலும் ஒரு மாதம் பரோலை நீடிக்க அற்புதம்மாள் மீண்டும் மனு அளித்திருந்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்த நிலையில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பேரறிவாளன் தரப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ராஜீவ்காந்தி கொலைக்கு நான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்பது தான் என்மீதான குற்றச்சாட்டு. ஆனால் அன்று வெடித்த குண்டில் நான் வாங்கிக் கொடுத்த பேட்டரிதான் பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்பிகிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பியது. 

இந்நிலையில், 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios