தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் பன்வாரிலால் ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் 
விடுதலையாவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில், இவர்கள் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில்
தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து மாநில அரசு இவர்களை விடுவிக்கும் வகையில் அமைச்சரவை கூட்டப்பட்டு, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றினர். அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி முடிவெடுத்து 11 ஆம் தேதி அதை உடனே ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், மாநில அரசின் முடிவை நிறைவேற்ற வேண்டிய ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்பதற்காக மத்திய அரசுக்கு அனுப்பியதாக தெரிகிறது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, பேரறிவாளனின் தாயார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார். 7 பேரின் விடுதலைக்கு சட்ட ரீதியாக இருந்த தடைகள் விலகிவிட்ட நிலையில், துறை ரீதியாக தாமதப்படுததப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், கிண்டியில் உள்ள ஆளுநர் 
மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்தார். அப்போது, பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததோடு மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு அற்புதம்மாள், செய்தியாளர்களைச் 
சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்பார் என்றும் பேரறிவாளன் விடுதலையாவர் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். 7 பேரின் விடுதலைக்கு சில ஓய்வு பெற்ற சில போலீஸ் அதிகாரிகள் எதிர் கருத்து கூறுவது பற்றி செய்தியாளர் கேட்டதற்கு, அவர்கள் இழப்பீடு கேட்கிறார்கள்... 28 வருடமாக சிறையில் இருக்கும் என் மகனுக்கும் எனக்கும் என்ன இழப்பீடு கொடுப்பீர்கள் என்று அற்புதம்மாள் கேள்வி எழுப்பி இருந்தார்.