ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியதற்கு அவரது தாய் அற்புதம் அம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியதற்கு அவரது தாய் அற்புதம் அம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் 9 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். மேலும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நடைபெறறது. அப்போது, ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்புகள் இருந்த போதிலும் அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியதற்கு அவரது தாய் அற்புதம் அம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், அறிவின் 31 ஆண்டு சிறை, நன்னடத்தை, சிறையில் பெற்ற கல்வி, உடல்நிலை ஆகியன கருதி பிணை வழங்கப்பட்டுள்ளது. துணை நின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி , மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் உள்ளிட்ட அனைவருக்கும் கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறுப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
