அரியலூர்

கள்ளூர் கிராமத்தில் நடந்த சல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளால் முட்டி தூக்கி வீசப்பட்ட 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ளது கள்ளூர் கிராமம். பிள்ளையார் கோவில் தெருவில் வாடிவாசல் அமைக்கப்படு நேற்று சல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

முதலில் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை முந்திக் கொண்டு அடக்கினர். அப்போது மக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். சில காளைகள். வீரர்களை பந்தாடியது.

இதில் தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு போட்டியில் கலந்து கொண்டன.

காளைகள் முட்டியதில் திருவரங்கத்தை சேர்ந்த கோபி (22), கோக்குடி கிராமத்தைச் சேர்ந்த இருதயராஜ் (32), கீழ எசனையைச் சேர்ந்த கோவிந்தராஜ் (25), இலந்தை கூடத்தைச் சேர்ந்த மணிகண்டன் (24), கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (26) உள்பட எட்டு பேருக்கு பெரும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் இருதயராஜ், மணிகண்டன் இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளி நாணயங்கள், வெள்ளி பாத்திரங்கள், வேட்டி, ரூ.5 ஆயிரம் வரையிலான பணமுடிப்பு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

சல்லிக்கட்டுப் போட்டியை காண அரியலூர், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், திருச்சி, பெரம்பலூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான மக்கள் வந்திருந்தனர்.

இந்தப் போட்டியை விழாக்குழுவினர் மற்றும் கள்ளூர் மக்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.