Arivoli passed away in Trichy
தமிழறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளரும், வழக்காடு மன்றத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவருமான டாக்டர் அறிவொளி (80) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். நொகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சிக்கல் இவரது சொந்த ஊராகும். தற்போது அவர் திருச்சியில் வசித்து வருகிறார்.
.jpg)
டாக்டர் அறிவொளி, டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் மாற்றுமுறை மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை கொண்டு சென்ற இவர், புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு உண்டென்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள பழமையும், பெருமையும் கொண்ட பிரசித்தி பெற்ற கோயில்கள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களுக்குச் சென்று அதன் வரலாறுகளையும், சிறப்புக்களையும் ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் 120-க்கும் மேற்பட்ட புத்தகங்களும் எழுதியுள்ளார்.
.jpg)
1986 ஆம் ஆண்டு வழக்காடு மன்றத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் இவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டாக்டர் அறிவொளி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். டாக்டர் அறிவொளி இறந்த செய்தியைக் கேட்டு, தமிழறிஞர்களும், ஆன்மீகப் பெரியோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
