Archaeologists survey the protest against the mass resistance of the people Ancient old people
காஞ்சிபுரம்
ஜெமீன் பல்லாவர பகுதியில் ஆய்வு செய்வதற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பழங்கால முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பல்லாவரம் நகராட்சி, ஜெமீன் பல்லாவரம் பகுதியில் பண்டைய கால பொருட்கள் பூமியில் புதைந்துள்ளது என்று கூறியது தொல்லியல் துறை,
அதன்படி, அங்கு ஆய்வு செய்ய திட்டமிட்டு அந்ப் பகுதிகளில் வீடுகள் கட்ட தடை விதித்தது. இதற்கு ஜெமீன் பல்லாவரம் பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு விதமனா போராட்டங்களை நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தப் பகுதிகளில் மக்களின் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் மூலம் நில அளவை செய்யப்பட்டது. தொல்லியல் துறை ஆய்வு நடைபெறும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் பல்லாவரம் தாசில்தார் வில்பிரட் முன்னிலையில் ஆய்வு நடத்தினர்.
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பும் போடப்பட்டது. முதல் நாள் ஆய்வின்போது சில இடங்களில் உடைந்த நிலையில் பண்டையகால முதுமக்கள் தாழி கிடைத்தது.
செயற்கைகோள் மூலம் படம் எடுத்து அம்பேத்கர் விளையாட்டு திடல் அருகில் நேற்று மாலை தொல்லியல் துறையினர் பூமியை தோண்டி ஆய்வு செய்தனர். அப்போது சுடு மணலால் செய்யப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.
ஒன்றரை அடி அகலமும், 6 அடி நீளமும் கொண்ட முதுமக்கள் தாழியின் அடிப்பகுதியில் 1 அடியில் மணலால் 12 கால்கள் செய்யப்பட்டிருந்தது. அந்த முதுமக்கள் தாழியை தலைமை செயலக வளாகத்தில் உள்ள ஆய்வகத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்டுச் சென்றனர்.
இந்த ஆய்வுக்கு பின்னர் முதுமக்கள் தாழி எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது கண்டறியப்படும் என்றும், தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வுகள் இந்தப் பகுதியில் நடைபெறும் என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
