இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் உள்ள 175 சங்கங்களுக்கு 1925 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டுறவுச் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளர் பா.முருகேசன் தெரிவித்தார்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளர் பா.முருகேசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "இராமநாதபுரம் மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் 131 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள், 34 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கங்கள், 4 நகர கூட்டுறவு வங்கிகள், 4 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலை ஒன்றும், தனிவகை கூட்டுறவு சங்கம் ஒன்றும் என மொத்தம் 175 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.

இந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு 1925 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் நான்கு கட்டங்களாக ஏப்ரல் 2, 7, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

முதற்கட்டமாக, 43 கூட்டுறவுச் சங்கங்களுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு வாபஸ் மார்ச் 27-ஆம் தேதியும், இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 28-ஆம் தேதியும் வெளியிடப்படும்.

இதுதவிர, மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள், கால்நடை, வேளாண்மைத் துறை, வீட்டுவசதி மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்கள் என 523 சங்கங்களுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் அந்தந்தத் துறை அதிகாரிகள் மூலம் தேர்தல் நடத்தப்படும்.

பரமக்குடி சங்கங்களுக்கு பரமக்குடி துணைப் பதிவாளரும், இராமநாதபுரம் சங்கங்களுக்கு இராமநாதபுரம் துணைப் பதிவாளரும், மாவட்டத் தேர்தல் அலுவலராகச் செயல்படுவர்.

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முடிந்து வாக்குப் பெட்டிகள், தேர்தல் நடத்துவதற்கான படிவங்கள் ஆகியனவும் தயார் நிலையில் உள்ளன. 

தேர்தல் அலுவலர்களாக வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.