குரங்கணி மலை காட்டுத்தீ குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், 2 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதைதொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயம் உடையவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து டிரெக்கிங் அழைத்து சென்றவர்கள் அனுமதி பெறாமல் சென்றதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் டிரெக்கிங் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், குரங்கணி மலை காட்டுத்தீ குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், 2 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.