appointment of new judges in madras HC
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 6 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 6 கூடுதல் நீதிபதிகளை நியமித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் வழக்கறிஞர்களாக உள்ள பவானி சுப்பராயன், ஜெகதீஷ் சந்திரா, சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், தண்டபாணி, ஆதிகேசவலு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டனர்.
இன்று காலை 10 மணிக்கு, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலையரங்கில் புதிய நீதிபதிகள் 6 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய நீதிபதிகள் 6 பேர் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டதன் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது. தற்போது அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. மேலும் நீதிபதிகள் காலியிடங்கள் 21 ஆக குறைந்துள்ளது.
நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ஜெகதீஷ் சந்திரா, தமிழக அரசின் முன்னாள் அரசு வழக்கறிஞராக பணியாற்றிவர். அதோடு மட்டுமல்லாமல், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 9 ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
