வாட்ஸ் அப்பில் வைரலாகும் அந்த மீம்ஸ் சிரிப்போடு சேர்த்து சிந்திக்கவும் தூண்டுகிறது... ’கிட்னி விற்று சம்பாதிக்கும் மருத்துவமனைகள் எங்கே.
ஆனால்! வெறும் இட்லியை மட்டுமே விற்று சம்பாதிக்கும் நம் அப்பல்லோ எங்கே!’ -என்பதுதான் அது. 

இதே மண்ணில் ஒரு வேளை சோத்துக்கு வழியில்லாமல் கதறும் குழந்தைகளும் பல்லாயிரம் இருக்கின்றன, உயிர் போகும் நிலையிலும் உருப்படியான மருத்துவ உதவி கிடைக்காமல், அரசு மருத்துவமனையில் அற்ப ஆயுசில் கண் மூடும் மனிதர்களும் பல்லாயிரம் இருக்கிறார்கள். ஆனால் இந்த மாநிலத்தின் முதல்வரோ தன் உடல் நலிவு பிரச்னைக்காக, தன்னால் நடத்தப்படும் அரசு மருத்துவமனையில் சென்று சேராமல் அப்பல்லோவில் சேர்க்கப்படுகிறார். 

பூடகமாகவே அவரது சிகிச்சைகளையும், அவரது உடல்நிலையையும் இரு மாதங்களுக்கும் மேலாக வைக்கிறார்கள், ஒரு நாள் அவரது இறப்பு அறிவிக்கப்படுகிறது, அதன் பின் என்னென்னவோ நடக்கிறது. முதல்வரின் இறப்பு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படு, அதனிடம் நேற்று அப்பல்லோ ஜெ., சிகிச்சைக்கான மொத்த செலவு பில்லையும் வழங்கியுள்ளது. 75 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம்  6 கோடியே 85 லட்சம் ரூபாய் என மொத்த தொகை குறிப்பிடப்பட்டுள்லது. அதில் சாப்பாடு  செலவு மட்டும் ஒரு கோடியே பதினேழு லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார்! என்றுதான் அமைச்சர்கள் வெளியே வந்து அளந்துவிட்டார்கள். எழுபத்தைந்து நாட்களுக்கும் சேர்த்து இட்லி, இடியாப்பத்துக்கு ஒரு கோடியே பதினேழு லட்சமா ஆகும்? ஆக ஜெயலலிதா நோய் படுக்கையில் போராடிக் கொண்டிருந்தபோது சசிகலா, அவரது குடும்பத்தினர் துவங்கி வி.ஐ.பி., வி.வி.ஐ.பி.க்கள் என நகர்ந்து போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளையும் சேர்த்து அப்பல்லோவில் ஜெ.வுக்கான விஷயமாக வந்து நின்ற கடைநிலை அரசு ஊழியர் வரை அத்தனை பேரும் கேண்டீன்  வஸ்துக்களில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. 

ஒருவேளை ஜெயலலிதா உண்மையிலேயே சாப்பிட்டிருந்த இட்லியில் துவங்கி மற்றவர்கள் பிரித்து மேய்ந்த இத்யாதி வரை அப்பல்லோ தீட்டியிருக்கும் பில் ஒருகோடியே பதினேலு லட்சத்தையும் வகையாக வாங்கி லாக்கரில் போட்டுக் கொண்டிருக்கிறது அப்பல்லோ நிர்வாகம். ’ஒரு நோயாளியுடன் இருந்தவர்களின் கைங்கர்யத்தால் அப்பல்லோ வசூலித்திருக்கும் அகாசுகா தொகையை பாரீர்!’ என்று தேசமெங்கும் ரவுண்டு கட்டி ரகளையாகிறது இந்த விவகாரம். 

இந்த சூழ்நிலை இப்படியிருக்க, கஜா புயல் நிவாரணத்துக்கு நன்கொடைகள் வேண்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்தவர்களின் விபரங்கள் அவ்வப்போது அரசு துறையிலிருந்து வெளியிடப்படுகின்றன. அதில் சம்பந்தப்பட்ட நபர் பற்றிய விபரமும், அவர் வழங்கிய தொகையும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் லிஸ்டில் கடந்த 13-12-2018 அன்று முதலமைச்சர் அவர்களிடம் நிதி வழங்கியவர்களின் பட்டியலில் மூன்றாவதாக அப்பல்லோ வருகிறது. அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத்தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, அவரது கணவர் விஜயகுமார் ரெட்டி மற்றும் மகன் கார்த்திக் ரெட்டி ஆகியோர் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மாநிலத்தில் விசாலமாய் மருத்துவமனைகள் அமைத்து தினம் தினம் கோடிக்கோடியாய் சம்பாதித்துக் கொட்டுகிறது அப்பல்லோ நிர்வாகம். அதே மண்ணில் நடந்திருக்கும் இயற்கை பேரழிவுக்கு வெறும் ஒரு கோடியைத்தான் தந்திருக்கிறது! என விமர்சித்து தள்ளுகிறார்கள் பொதுப்பார்வையாளர்கள். மாநில முதல்வரின் ரெண்டு மாத சிகிச்சைக்கான சாப்பாடு செலவுக்கு மட்டுமே ஒரு கோடியே பதினேழு லட்சம் போட்டுத் தீட்டிய அப்பல்லோ சுமார் பத்து மாவட்டங்களின் மக்களின்  துயர் துடைக்க கொடுப்பது வெறும் ஒரு கோடி என்பது அட்ராசிட்டியல்லவா! என்கிறார்கள்.