ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என ஊட்டச்சத்து நிபுணர் விசாரணை ஆணையத்தில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், மாறுப்பட்ட தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணையின் போது அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கைகளும், டாக்டர்கள் அளித்த வாக்குமூலத்திலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அளவுக்கு அதிகமாக லட்டு, அல்வா போன்ற இனிப்பு சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து அப்போலோ மருத்துவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் ஊட்டச்சத்து நிபுணராக இருந்த புவனேஸ்வரி சங்கர் மற்றும் செவிலியர் ராஜேஷ்வரியும் ஆஜராகும்படி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. விசாரணை ஆணையத்தில் இருவரும் நேற்று ஆஜராகினர். 

அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்து டிசம்பர் 4ம் தேதி வரை மருத்துவர்கள் மூத்த நிபுணர் என்பதால் தன்னை அழைத்து, ஜெயலலிதா உடல்நிலை குறித்து அனைத்து விவரங்களையும் பட்டியலிட்டு கொடுத்தாகவும், அதனை அடிப்படையாக வைத்து தான் உணவு கொடுத்தேன்.

முதல் இரண்டு நாட்கள் மருத்துவமனையின் உணவுகள் வழங்கப்பட்டது, பின்னர் ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை, ஆகையால் சமையல்காரர்களை வைத்தே மருத்துவமனையில் இருந்து தனியாக சமைத்து உணவு வழங்கப்பட்டது. அதில் முக்கியமாக லட்டு போன்ற இனிப்புகள் அப்பலோ மருத்துவர் ஜெயஸ்ரீயின் அனுமதியோடு தான் அளிக்கப்பட்டது. 

மேலும் சர்க்கரை நோயாளியான அவருக்கு இனிப்புகள் வழங்கும் போது என்னிடம் ஆலோசனை செய்யாமல், என்னை கேட்காமல் வெளியில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. இவற்றை நான் உணவு பட்டியலை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார். ஜெயலலிதாவின் உணவு பட்டியலில் பல நாட்கள் புவனேஷ்வரி கையெழுத்து போடவில்லை என்பது குறித்தும், பிற சாட்சிகள் அளித்த சாட்சியங்களை வைத்து கிடுக்குபிடி கேள்விகள் கேட்டதாகவும், அதற்கு பதில் இல்லாமல் புவனேஷ்வரி திணறியதாகவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இனிப்பு வழங்கப்பட்டது குறித்து அப்போலோ மருத்துவர் ஜெயஸ்ரீ ஆணையத்தில் கூறுகையில் ஊட்டச்சத்து நிபுணர் தான் கொடுத்தார் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது புவனேஷ்வரி மருத்துவர் ஜெயஸ்ரீ மீது புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.