ஈரோடு,
அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம் என்று, வீட்டுமனையாகத்தான் வேண்டும் என்றும் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் இரண்டாவது நாளும் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை தங்களது உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர்.
அவர்களிடம் ஈரோடு நகர காவலாளர்களும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால், வீட்டுமனை பட்டா வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக இருந்த மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தை நேற்று முன்தினம் நள்ளிரவிலும் தொடர்ந்தனர்.
25–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்தது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க தலைவர் துரைராஜ் கூறியது:
“இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். சென்னிமலை அருகே புத்தூர்புதுப்பாளையம் பகுதியில் உள்ள வீட்டுமனைகளை எங்களுக்கு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகளிடம் கேட்கும்போது ஒருசில காரணத்தை கூறி பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
தற்போது வேறுபகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை வழங்குவதாகவும், அங்கு குறிப்பிட்ட வைப்பு தொகையை செலுத்தி தங்கிக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். எங்களுக்கு வீட்டுமனையாகத்தான் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி எங்களுடைய ரேசன் அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை நாளை (அதாவது இன்று) ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
