நீட் தேர்வு மருத்துவ படிப்பில் சேர விரும்பும், அனைத்து மாணவர்களும் எழுத வேண்டிய தேர்வு. 2017ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் இந்த தேர்வு, 2013ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டதாலும், வேறு சில காரணங்களாலும், இந்த தேர்வை 2013 ஜூனில் தடை செய்து விட்டனர்.

அதனை தொடர்ந்து இப்போது 2017ல் மீண்டும் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 2017ல் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அதில் மொழிப்பெயர்ப்பு சரியான முறையில் இல்லாததால், மாணவர்களால் அந்த தேர்வை சரியாக எழுத முடியவில்லை.

மேலும் இந்த நீட் தேர்வில், சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படும். இதனால் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த நீட் தேர்வு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. மருத்துவம் படிப்பதை கனவாக கொண்டிருந்த பெரும்பாலான மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 1200க்கு 1175 மதிப்பெண்கள் எடுத்த, அனிதா என்ற மாணவியால், நீட் தேர்வில் 720க்கு86 மதிப்பெண்களே பெற முடிந்தது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அந்த ஏழை மாணவியின் கனவு, நீட் தேர்வினால் தகர்ந்தது. இந்த ஆண்டு நடை பெற்ற நீட் தேர்விலும் அனிதாவை போன்ற கிராமப்புற மாணவர்கள், மாநில அரசின் பாடத்திட்டத்தில் கல்வி பயின்றவர்கள், என பல மாணவர்களால் தேர்ச்சி பெற இயலவில்லை.

மாநில அரசின் பாடத்திட்டத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போன் காரணத்தால், பல இளம் உயிர்கள் இந்த ஆண்டும் பலியாகி இருக்கின்றன. கல்வி என்பது ஒரு தனிமனிதனின் அடிப்படை உரிமை. அந்த அடிப்படை உறிமையை பறிப்பது போன்றதாக அமைந்திருக்கிறது இந்த நீட் தேர்வு. அனிதாவின் மரணத்தை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடை பெறதான் செய்தது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால், டெல்லியை சேர்ந்த மாணவர் பர்ணவ், 8ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளாக இந்த தேர்விற்காக முயன்று வருகிறார். இந்த ஆண்டும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த பர்ணவ் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று தமிழ் நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி, நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்த இவருக்கு, கடந்த ஆண்டு சித்தா படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்ற கனவை அடைய அவர் முயற்சியில் ஈடுபட்டார். இதனால்  தமிழ் மொழிப்பெயர்ப்பில் இருந்த தவறை கருத்தில் கொண்டு, 4 மதிப்பெண்கள் வழங்குமாறும் அரசிடம் கோரி இருந்தார் பிரதீபா.ஆனால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.

அதன் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியிருந்தார் பிரதீபா. ஆனால் தேர்வில் அவரால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. இதனால் மனமுடைந்த அவர் விஷமருந்தி  தற்கொலை செய்துகொண்டார். அன்று அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. இன்று மீண்டும் அது போல ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. தமிழர்களாகவும் சக மனிதராகவும் இது போன்ற இழப்புகளை தவிர்க்க முடியாமல் இருப்பது, நமக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் தலைகுனிவே.