யாத்திரைக்கு பதிலாக அண்ணாமலை குற்றாலத்தில் சிகிச்சை எடுக்கலாம்: ஈவிகேஸ் இளங்கோவன்!
பாஜகவுக்கு சாவு மணி அடிப்பதற்கு அண்ணாமலை யாத்திரையை தொடங்கி இருக்கிறார் என ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஸ் இளங்கோவன் சாடியுள்ளார்
ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அறக்கட்டளை சார்பில் பொது மருத்துவ முகாமை ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவுக்கு சாவு மணி அடிப்பதற்கு அண்ணாமலை யாத்திரையை தொடங்கி இருக்கிறார். ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக இருந்ததாக கூறும் அண்ணாமலை, ஒரு மாதத்திற்கு முன்பு அவரை ஊழல் பேர்வழி என்றார். அண்ணாமலை நிலைத்தன்மை இல்லாத நபர். நிரந்தரமான கருத்தில்லாதவர். பச்சோந்தி போல் மாறிக்கொண்டே இருக்கக்கூடிய நபர்தான் அண்ணாமலை. பாதயாத்திரை சென்று நேரத்தை வீணடிப்பதை விட குற்றாலத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் திருந்துவார் என நினைக்கிறேன்.” என்றார்.
யாத்திரைக்கு நடுவே மக்களோடு அமர்ந்து ‘மான் கி பாத்’ கேட்ட அண்ணாமலை!
தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூரில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் வெளிநாட்டிற்கு சென்று அங்குள்ள அதிபர்களை கட்டியணைத்து கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறாமல் வெளிநாட்டு தலைவர்களை கட்டி பிடிப்பதில் பொழுதை கழிக்கின்றார். மோடியின் அரசு தூக்கி எறியப்பட வேண்டிய அரசு.” என்றார்.
என்எல்சி விவகாரம் பற்றி கருத்து சொல்ல நிபுணர் அல்ல; அதைப்பற்றி அதிகம் தெரியாது என்ற ஈவிகேஸ் இளங்கோவன், ஆனால், பயிர்கள் விளைந்து கொண்டிருப்பதால் இரண்டு மாதம் கழித்து பணிகளை செய்திருக்கலாம். அறுவடைக்கு தயாராக பயிர்கள் உள்ள நிலையில் புல்டோசர், ஜேசிபி கொண்டு நிலத்தை எடுப்பது சரியாகப்படவில்லை என்றார்.