யாத்திரைக்கு நடுவே மக்களோடு அமர்ந்து ‘மான் கி பாத்’ கேட்ட அண்ணாமலை!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது யாத்திரைக்கு நடுவே மக்களோடு அமர்ந்து பிரதமர் மோடியின் மான் கி பாத் உரையை கேட்டார்
ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையானது சென்னையில் நிறைவடையவுள்ளது. ஜனவரி 11ஆம் தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அண்ணாமலையின் யாத்திரை செல்லவுள்ளது. கால்நடையாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையும் நடைபெற்று வருகிறது. 1700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.
அதன்படி, ராமேஸ்வரத்தில் முடிந்த அண்ணாமலையின் யாத்திரை இன்று முதுகுளத்தூரில் தொடங்கியுள்ளது. முதுகுளத்தூரில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு அண்ணாமலை மரியாதை செய்தார். மேலும், வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கும் அவர் மரியாதை செய்தார். முன்னதாக, அங்குள்ள ஜூஸ் கடை ஒன்றில் வெயிலுக்கு இதமாக ஜூஸ் குடித்த அண்ணாமலை, கடைக்காரரிடம் அதற்கான தொகையை தனது பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.
இதையடுத்து, வாகனத்தில் இருந்தபடி பேசிய அண்ணாமலை, “முதுகுளத்தூருக்கு தனிச்சிறப்பு, தனிப்பெருமை உண்டு. முதுகுளத்தூர் ஒரு ரோஷமான ஊர். தாமதமாக வந்ததற்கு மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். இந்த யாத்திரையின் நோக்கம் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவது. ஏனென்றால், இந்தியாவில் ஏதேனும் நல்லது நடந்துள்ளது என்றால், அது கடந்த 9 ஆண்டுகளாகத்தான். மோடி வந்தபிறகுதன அரசு இயந்திரம் வேலை செய்கிறது.” என்றார்.
ராமநாதபுரம், முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் ஏதேனும் செய்ய வேண்டும் என மத்திய அரசு நினைப்பதாக தெரிவித்த அவர், “திமுக இந்த பகுதிக்கு எதுவும் செய்யவில்லை. மக்களின் வாழ்க்கை தரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இங்கு மாற்றம் வேண்டுமானால் அரசியல் மாற்றம்தான் தீர்வு.” என்றார்.
இதையடுத்து, மக்களோடு அமர்ந்து பிரதமர் மோடியின் மான் கி பாத் உரையை கேட்டார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அதனை மக்களோடு அமர்ந்து அண்ணாம,லை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கேட்டனர்.