தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை தொடர்பாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக மத்திய அரசை கண்டித்தும், பாஜக திமுகவை விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு

தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. ஆனால் தமிழக அரசோ தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்று இருக்கும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என உறுதியாக தெரிவித்து விட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கல்வி திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் 2000 கோடி ரூபாய் வழங்க முடியாது என தெரிவித்து விட்டது. எனவே மத்திய பாஜக அரசின் செயல்பாட்டை கண்டித்து திமுக, அதிமுக சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்திலும் ஈடுபட்டது.

விஜய்யின் சிபிஎஸ்இ பள்ளி

இதனிடையே தமிழகத்தில் இந்தியை மாணவர்கள் கற்க வேண்டும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் வீட்டு குழந்தைகள் மட்டும் இந்தி கற்க வேண்டும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தி கற்க கூடாதா.? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதன் படி, தமிழகத்தில் மும்மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த இருமொழிக் கொள்கையை திமுக அரசு பின்பற்றுகிறது எனவும் குற்றம் சாட்டினார். புதிய கல்விக் கொள்கையில் இந்தியை ஒருபோதும் திணிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிக்கப்படாது என கூறினார். 

சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாக குழு தலைவர் திருமாவளவன்

நடிகர் விஜய் ஒரு சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? 'விஜய் வித்யாஸ்ரம்' என்ற பெயரில் விஜய் சிபிஎஸ்இ பள்ளியை நடத்துகிறார். தன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் அந்தப் பள்ளி இயங்குகிறது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. 

Scroll to load tweet…

சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.