'திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்' அண்ணாமலை திடீர் சபதம்; முழு விவரம்!
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு வன்கொடுமை
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அந்த மாணவி, சக மாணவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி ஏதும் வேலை செய்யவில்லை
இதற்கிடையே கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் குற்றம்சாட்டி இருந்தார். கைதான ஞானசேகரன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழ்நாட்டின் தலைநகரில் அதுவும் பல்கலைக்கழக வளாகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்றால் தமிழ்நாட்டில் சாதாரண பெண்களுக்கு அரசு எப்படி பாதுகாப்பு அளிக்கும்? பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி ஏதும் வேலை செய்யவில்லை என்றும் அதிர்ச்சியான தகவலை கூறுகிறார்கள்.
அண்ணமலை சபதம்
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திமுகவில் இருந்தவர் தான். அவர் தனது குற்றச்செயல்களை மறைக்க அமைச்சர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராக காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அதுவும் அந்த எப்ஐஆர் வெளியில் கசிந்துள்ளது. காவல்துறையின் தொடர்பு இல்லாமல் எப்ஐஆர் எப்படி வெளியே செல்ல முடியும்?
சாட்டையால் அடித்துக் கொள்வேன்
தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக இனிமேல் ஆர்ப்பாட்டம் கிடையாது; தமிழ்நாடு அரசுக்கு எதிராக இனி வேறு வழியில் எதிர்ப்பு தெரிவிப்போம். நாளை காலை 10 மணிக்கு எனது வீட்டுக்கு வெளியே நின்று என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தனது காலில் இருந்து செருப்பை கழற்றிய அண்ணாமலை, 'திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்' என்ற சபதத்தை தொடங்கினார். அண்ணாமலையின் சபத அறிவிப்பு தமிழகம் முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது.