குழந்தையின் கை அகற்றம்: அண்ணாமலை கண்டனம்!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகனுக்கு தலையில் நீர் கோர்த்த பிரச்சினை காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது குழந்தையை அனுமதித்துள்ளார். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து அக்குழந்தையின் கை மேலும் அழுகியதால், குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் தங்களது குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்திருப்பதாகவும், தவறு ஏற்பட்டு இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, வலது கை முட்டு வரை பாதிக்கப்பட்டு, வலது கையை வெட்டி அகற்றியிருக்கின்றனர். குழந்தைக்குக் கொடுத்த தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கம் ஏற்கும்படியாக இல்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரே நம்பிக்கையாக விளங்கும் அரசு மருத்துவமனைகள், தொடர்ந்து இது போன்று சர்ச்சைகளில் சிக்குவது ஏற்புடையதல்ல.
அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது, எதேச்சையானதா அல்லது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனைகள் குறித்து நம்பிக்கையின்மையை விதைப்பதற்கா என்ற சந்தேகம் எழுகிறது.
உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, குழந்தையின் பெற்றோரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து குழந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “குழந்தை பிறக்கும் போது பல்வேறு குறைகளுடன் பிறந்துள்ளது. குழந்தை 32 வாரங்களிலேயே முன்கூட்டியே பிறந்துள்ளது, மூன்று மாதத்தில் தலையை சுற்றி பெரிய அளவில் நீர் வந்ததால்தான் உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குழந்தைக்கு உடலில் ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவி கடந்த மாதம் 25ஆம் தேதி மலத்துளையின் வழியாக வெளியே வரவே அந்த சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. தலையில் ரத்தம் செல்லக்கூடிய சர்குலேஷன் அடைப்பு ஏற்பட்டது குறித்து தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கான சிகிச்சையானது நடை பெற்றது. ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால் கை தளர்ச்சி ஏற்பட்டு இரத்த உறைதல் ஏற்பட்டது.
குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏதாவது தவறு இருந்தால் தனியார் மருத்துவர்களை கூட அழைத்து வாருங்கள் அவர்கள் கூட சோதனை செய்யட்டும். நாங்கள் செலவு செய்து, அந்த மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்யச் சொல்கிறோம். பெற்றோர் கேட்டுக்கொண்டால், குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் தயார். சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.