என்னது பஞ்சு சாட்டையா? வாங்க உங்களை சோதித்து பார்க்கலாம்? திமுக கவுன்சிலருக்கு அண்ணாமலை சவால்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர்கள் என எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் ஆதாரத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என திமுக தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த சூழலில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: அமைச்சருடன் செல்லும் அளவுக்கு ஞானசேகரன் அவ்வளவு நெருக்கமா? அடுத்தடுத்து ஆதாரம்! விடாத அண்ணாமலை!
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த சென்னை மாநகராட்சி 184-வது வார்டு உறுப்பினர் எஸ்.வி.ரவிச்சந்திரனுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி 184வது வார்டு உறுப்பினரும், 14ம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. #ShameOnYouStalin
குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 - 2011 திமுக ஆட்சியில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக, குண்டாஸ் வழக்கில் கைதானவர்.
ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில், இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை. பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம் தயாரா? என காட்டாக அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.