திருப்பதியில் நடைபெற்ற கோவில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவில்களை அடிப்படையாகக் கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்றும், திருப்பதி கோவிலின் சந்தை மதிப்பு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்தும் பேசினார்.

கோயில்களின் மூலம் பணப்புழக்கம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோவில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாளான நிகழ்ச்சியில் ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு கோயில்களின் வரலாற்றைப்பற்றி பேசினார்கள். இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற நிகழ்வில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களை அடிப்படையாக வைத்து பணப்புழக்கத்தை ஏற்படுத்த முடியும். பூரி ஜெகநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்ட பின் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.

திருப்பதி கோயிலின் மதிப்பு

தமிழ்நாட்டில் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன. அந்த கோயில்களை மேம்படுத்துவதன் மூலம் கோவில் இருக்கும் பகுதிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும். திருப்பதி கோவிலின் சந்தை மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என்று ஹார்டுவேர் ஸ்டடி ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறினார். மேலும் திருப்பதி தேவஸ்தானத்திடம் தற்போது 16 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி இருப்பு உள்ளதாகவும், 10 டன் தங்கமும், 2.5 டன் தங்க ஆபரணமும் உள்ளதாக தெரிவித்தார். .

தமிழக கோயில் நிலத்தை காணவில்லை

தமிழகத்தில் 10ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட கோவில்கள் எத்தனை உள்ளன என்பது யோசிக்க வேண்டிய விஷயம் என தெரிவித்த அண்ணாமலை, தமிழக கோவிலுக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை காணவில்லை என தெரிவித்தார்.

தமிழகத்தில் தமிழக அறநிலையத்துறை சார்பாக குடமுடக்கு நடத்துவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், சேகர்பாபு கொத்தனார் வேலை பார்த்து கலசத்தை தூக்கி வைத்து கும்பாபிஷேகம் செய்தாரா .? என கூறிய அவர், கோவில்களுக்கு கும்பாபிஷேகம் மக்கள் செய்கின்றனர். அறநிலையத்துறை துறை ஸ்டிக்கர் மட்டுமே ஓட்டுகிறது என்று தெரிவித்தார்.