அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு நடந்ததாக பல்கலைக்கழக பேராசிரியை உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்துள்ளதாகவும், 60 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில்  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுகூட்டலில் லஞ்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு செய்திருப்பது நேற்று முன்தினம் அம்பலமாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 565 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சுமார் 3 லட்சம் பேர் மறுக் கூட்டலுக்காக விண்ணப்பித்தனர்.

மறுக்கூட்டலில் 73 ஆயிரம் மாணவர்கள்கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஏற்கெனவே விடைத்தாள் திருத்திய குழுவை மாற்றி, புதிதாக பேராசிரியர் குழுவை அமைத்து மதிப்பெண் மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

இதற்கு முன்பு விடைத்தாள் திருத்திய பேராசிரியர்கள் மெத்தனமாகச் செயல்பட்டதாகக்கூறி, ஆயிரத்து 70 பேராசிரியர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு விடைத்தாள்கள் திருத்தம் செய்ய தடை விதித்து அப்போதைய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உத்தரவிட்டார்.

தற்போது அதே பேராசிரியர் உமா தான் இந்த முறைகேட்டில் முக்கியமானவராக சிக்கியுள்ளார்.மறுக்கூட்டலுக்கு இவரால் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் விஜயக்குமார், சிவக்குமார் மற்றும் விடைத்தாள் மதிப்பீடுசெய்தவர்கள் என மொத்தம் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர் ஒருவருக்கு தலா10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாகவும், போலியான விடைத்தாள்தயாரித்து மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக பேராசிரியர் உமா கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2018- மார்ச் மாதம் வரை செயல்பட்டு வந்தார். மதிப்பெண் முறைகேட்டில் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ளதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து  கோட்டூர்புரத்தில் உமாவின் வீடு, திண்டிவனத்தில் உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புகாவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

 இதில், தேர்வுத்தாள் மதிப்பீடு செய்ததில்உள்ள குறைபாடுகள் தொடர்பான ஆவணங்களும், அசையாசொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில்  400 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 60 மாணவர்களுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புதுறை உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.