திமுக ஐடி விங் அதிரடி பிரச்சாரம்! அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்! காரணம் என்ன?
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் சுதாகர் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்த அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவன் மீது சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார் பகல் மற்றும் இரவு முழுவதும் அலை கழித்தது மட்டுமல்லாமல் மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் புகாரை வாங்க மறுத்தது மட்டுமல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் பெயரை நீக்கும்படி போலீசார் வலியுறுத்தி உள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டனர். இந்த வீடியோவை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல் சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! அடுத்த 12 நாட்கள் லீவே இல்லை! தொடர்ந்து ஸ்கூல் தான்!
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் சிறப்பு குழு விசாரணை நடத்த உத்தரவிட்டது. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இணை ஆணையர் சரோஜ்குமார் தாக்கூர், அண்ணாநகர் துணை ஆணையர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த விசாரணையில் குற்றவாளிக்கு ஆதரவாக அண்ணாநகரைச் சேர்ந்த 103வது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் நேரடியாக செயல்பட்டது தெரியவந்தது. அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி போலியான குற்றவாளியை கைது செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் சுதாகர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர், (103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர்)
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிரட்டும் HMPV வைரஸ்! தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம்! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
இதனிடையே அண்ணாநகரில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ள அதிமுக வட்டச் செயலாளர் எடப்பாடியுடன் உள்ள படத்தைக்காட்டி இவர் தான் அந்த சார் என்று திமுகவின் ஐடி விங் விநியோகித்து வருகிறது.