அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கோவையில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். 

மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா மரணம் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. 

அனிதாவின் மரணத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையும் இரங்களையும் தெரிவித்து வருகின்றனர். அனிதாவின் மரணத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாணவர்களும், மாணவ அமைப்புகள், பொதுமக்கள் என தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அனிதாவின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து கோவை மாநகரில், மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை ரயில் நிலையம் அருகே இந்த போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த போராட்டத்தின்போது, அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். மேலும் அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்யவும் கோரி போராட்டம் நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர் அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.