முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அரசின் நிதியை பெற தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தார் வாங்க மறுத்துவிட்டனர்.

மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் மாணவி அனிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இன்று, சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவி அனிதாவின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. 

அனிதாவின் இறுதி சடங்கில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழக அரசு அனிதாவின் குடும்பத்தாருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, இன்று அனிதாவின் வீட்டுக்கு சென்று, அரசின் உதவி தொகையை அவரின் குடும்பத்தாருக்கு வழங்கினார்.

ஆனால், தமிழக அரசின் நிதியை, பெற்றுக்கொள்ள அனிதா குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்த பிறகே நிதியுதவி பெற்றுக் கொள்வதாக அனிதாவின் சகோதரர் திட்டவட்டமாக கூறினார். 

நீட் தேர்வால் தன்னுடைய சகோதரி போலவே ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். 10 நாட்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனிதாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அனிதாவின் குடும்பத்தாரிடம் அரசின் நிதியை அளிக்க ஆட்சியர் லட்சுமி பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், ஆட்சியர் லட்சுமி பிரியாவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.