Anesthesia given to parents in the diet
தாய் - தந்தை மற்றும் சகோதரிக்கு உணவில் மயக்க மருந்து கலந்து விட்டு, மாணவி ஒருவர் காதலருடன் ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, களம்பூரை அடுத்த முக்குறும்பை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திவ்யா பி.ஏ. படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
விஜயராஜ், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது காதல், திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜயராஜ், விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். அப்போது திவ்யாவும் - விஜயராஜூம் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த நிலையில் திவ்யா, விஜயராஜுடன் ஊரை விட்டு ஓடியுள்ளனர். இதற்காக திவ்யா, தான் சமைத்த உணவில் மயக்க மருந்தை கலந்து, பெற்றோர் மற்றும் தனது சகோதரிக்கு பரிமாறியுள்ளார்.
இந்த உணவை அருந்திய அவர்கள் மயக்கமடைந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தியக் கொண்ட திவ்யா, வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மாயமாகியுள்ளார்.
இதனிடையே மயக்கம் தெளிந்து எழுந்த பிச்சாண்டி, அம்பிகா மற்றும் மகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து பிச்சாண்டி, போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஓடிப்போன திவ்யா மற்றும் விஜயராஜை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தான் விருப்பப்பட்டே விஜயராஜை திருமணம் செய்து கொண்டதாகவும், பணம் - நகை எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக திவ்யா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திவ்யாவின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். நகை - பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
