நாமக்கல்

நாமக்கல்லில், பிளஸ்-2 மாணவிக்கு நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி தருவதாக கூறி ரூ.2 இலட்சத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த ஆந்திர மாநில ஆசிரியர் கைது செய்யப்பட்டார்..

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வரகூராம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் படித்து வந்தார்.

அந்தப் பள்ளியில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சியளிப்பவராக கடந்தாண்டு ஆந்திரா மாநிலம், கர்ணூல் மாவட்டம், கொண்டாரெட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (34) என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.

அந்த பிளஸ்-2 மாணவியின் பெற்றோரிடம், நாகராஜ், “மாணவிக்கு தனியாக நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், “மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்” என்றும், “தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க நானே வழி செய்கிறேன்” என்று கூறி ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.

ஆனால், இதற்காக தனக்கு ரூ.2 இலட்சம் தரவேண்டும் என்று வாய்கூசாமல் கேட்டுள்ளார் நாகராஜ்.

இதனை உண்மை என்று  நம்பிய மாணவியின் பெற்றோர் நாகராஜிற்கு அவர் சொன்னபடியே ரூ.2 இலட்சத்தை கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட நாகராஜ் தலைமறைவானார். அதோடு அவரை பார்க்கவில்லையாம் அந்த மாணவியின் பெற்றோர். பல இடங்களில் அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர்.

இந்தநிலையில்தான் நேற்று முன்தினம் காலை கூட்டப்பள்ளி பகுதியில் நாகராஜ் நின்று கொண்டிருப்பதை மாணவியின் தாய் பார்த்துவிட்டு அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மாணவியின் தாயை அடித்து, கத்தியை காட்டி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  

பின்னர், இதுகுறித்து மாணவியின் தாய் திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

அப்போது கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே மறைந்திருந்த நாகராஜை காவலாளர்கள் கைது செய்தனர்.

பணம் மோசடி, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது என 2 பிரிவுகளின் கீழ் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்..

நாகராஜ் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.