andhra people visit to tamilnadu

ஆந்திராவில் மூன்று நாள்கள் டாஸ்மாக் இயங்காது என்பதால் மது பிரியர்கள், தமிழகத்திற்கு படையெடுத்து வந்து பெட்டி பெட்டியாய் சரக்குகளை வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ஆந்திராவிலும் மவுசு அதிகம்.

தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை நகரம் உள்ளது. இந்த நகரத்தை ஒட்டி தாசுகுப்பம் கிராமம் இருக்கிறது. இது ஆந்திர மாநில பகுதியாகும்.

இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இருக்கின்றன. ஆந்திராவில் சட்ட மேலவை (எம்.எல்.சி.) தேர்தல் இன்று நடைபெற உள்ளதால், ஆந்திராவில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூன்று நாட்களுக்கு மூடி வைக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதனால் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆந்திர மாநில பகுதியில் உள்ள தாசுகுப்பத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மது பிரியர்கள் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம், சீதஞ்சேரி, தண்டலம், பெரியபாளையம் பகுதிகளில் உள்ள தமிழக டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர்.

ஒரு சிலர் மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி ஆந்திராவுக்கு எடுத்துச் சென்றனர். இதை தடுக்க தாசுகுப்பம் கிராமத்தில் ஆந்திர காவலாளர்கள் தற்காலிகமாக சோதனைச்சாவடி போட்டு இருந்தனர்.

ஒரு சிலர் சிறு வியாபாரிகள் போல நடித்து காவலாளர்களுக்கு டிமிக்கி கொடுத்த சம்பவங்களும் அரங்கேறின.

எப்படியோ, தமிழகத்திற்கு தண்ணீரை தடுக்க நினைத்த ஆந்திராவுக்கு, பெட்டி பெட்டியாய் தண்ணீர் தந்தது தமிழகம் என்று பெருமைப்பட்டு கொண்டாலும் ஆச்சரியமில்லை.