குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற பிரச்சனைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான் இந்த நிலை இன்னும் நீடித்து கொண்டிருக்கிறது. சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் தமிழகமே அதிர்ந்திருக்கிறது. பெற்றோர் உடன் இருந்தும் இது போன்ற குற்றங்கள் நடந்திருக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரிய சம்பவம்.

இதனை தொடர்ந்து அயனாவரம் சிறுமிக்கு நியாயம் வேண்டி ,சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து நேற்று ஒரு போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நிஷா தன்னால் அயனாவரம் சிறுமியின் நிலையை நன்கு உணர முடியும். எல்லோரும் அவர் ஏன் முதலிலேயே தனது அம்மாவிடம் இந்த சம்பவம் குறித்து கூறவில்லை? என கேட்கின்றனர். 7 மாதங்களாக இந்த கொடுமை நடந்தும் அவர் ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை என நான் சொல்கிறேன். இதே போன்ற ஒரு கொடூர சம்பவம் என் வாழ்விலும் நடந்திருக்கிறது. 10 வயதில் ஆரம்பித்த இந்த கொடுமை 19 வயது வரை தொடர்ந்தது. நான் என் அம்மாவிடம் கூட இதை சொல்லவில்லை காரணம் பயம். அதே பயம் தான் அந்த சிறுமிக்கும் இருந்தது என கூறினார்.

அவர் கண்ணீருடன் கூறிய இந்த விஷயம் அங்கிருந்த அனைவரையும் கலங்கடித்துவிட்டது. இந்த போராட்டத்திற்கு கலந்து கொள்ள வரும்போது கூட கணேஷிடம் நான் எமோஷனலாகி விடுவேனோ, என பயமாக இருக்கிறது என்று தான் கூறினேன். அவர் தான் நீ வெளிப்படையாக பேசு உன் மனதில் இருக்கும் பாரம் குறையும் அத்துடன் இது போன்ற சம்பவங்களுக்கு எதிரான குரலாக உன்னுடைய பகிர்தல் அமையும். என தைரியம் கூறினார்.

அந்த தைரியம் தான் என்னை இப்போது பேச வைத்திருக்கிறது என கூறிய நிஷா தன்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்களை அப்போது கூறினார். சிங்கிள் மதராக இருந்ததால் நிஷாவின் அம்மா உறவினர்களின் அறிவுரையின் பேரில், நிஷாவை ஒரு குடும்பத்திற்கு தத்து கொடுத்திருக்கிறார். அந்த நபர் தான் நிஷாவை கொடுமை செய்திருக்கிறார். 60 வயதான அந்த நபர் அத்து மீறி நடந்து கொண்டதை யாரிடம் சொல்வது என தெரியாமல் பயந்து நடுங்கி இருக்கிறார் நிஷா.

மேலும் அவர் நிஷாவை அடித்து கொடுமைபடுத்தி இருக்கிறார். யாரும் கேட்டால் பாடம் சொல்லி தருகிறேன் அதனால் தான் அடிக்கிறேன் என கூறி இருக்கிறார் அந்த நபர். ஒரு கட்டத்தில் நிஷா அவரின் அம்மாவிடம் இதை சொல்லப்போவதாக கூறி மிரட்டிய போது, உன் அம்மாவிற்கு எல்லாம் தெரியும் என்றும் கூறி இருக்கிறார்.

இதனால் அவருக்கு தன் அம்மா மீதே வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டம் வரை இந்த சித்ரவதைகளை அனுபவித்த நிஷா, இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர தனே முயன்று, சொந்தமாக உழைத்து மாடலிங் செய்து சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறி சொந்த காலில் நிற்க துவங்கி இருக்கிறார்.

இந்த கொடுமைகள் நிஷாவின் ஆழ் மனதில் பதிந்திருப்பதால் இன்றளவும் அவருக்குள் ஏதோ ஒரு வித பய உணர்வு ஆட் கொண்டிருப்பதாகவும், இதனால் தூக்கத்தின் போது கூட பல முறை புலம்பி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு கணேஷின் அன்பினால் இது போன்ற கசப்புகளில் இருந்து வெளியே வந்த நிஷா, பிக் பாஸ் வீட்டிற்குள் கணேஷ் சென்ற போது 100 நாட்கள் அவரை பிரிந்திருக்க வேண்டுமே என வருந்தி அழுதிருக்கிறார். நிஷாவிற்கு நடந்த விஷயங்களை அறிந்த பிறகு, அவரது தாய் இன்றளவும் குற்ற உணர்ச்சியால் தவித்து வருகிறாராம்.

இது போன்ற கொடுமைகள் மேலும் தொடராமல் இருக்க குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்ன? என்பதை கற்று கொடுக்க வேண்டும். இந்த வன்கொடுமைகள் பெண் குழந்தைகளுக்கு தான் என்றில்லை ஆண்குழந்தைகளுக்கும் கூட நேரலாம். எனவே பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளிடம் அன்றாடம் என்ன நடந்தது என்பதை கேட்டு அறிய வேண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்ள வெளிப்படையாக பெற்றோரிடம் பேச கற்று தர வேண்டும். அப்போது தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.