திமுக எதிர்க்கட்சியாகக் கூட வரக்கூடாது அந்த நிலையை விரைவில் வரவைப்பேன் என்று பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் தற்போது கட்சியே பிளவு படும் அளவிற்கு உச்ச நிலையை அடைந்துள்ளது. தந்தை உடனான மோதல் ஒருபுறம் இருக்க தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி தீவிரப்படுத்தி உள்ளார். சுற்றுப்பயணத்தின்போது செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுடன் மக்களாக சகஜமாக பேசும் அன்புமணி ஆளும் அரசை கடுமையாக தாக்கி அப்பகுதி பிரச்சினைகளுக்கு தாம் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து வருகிறார்.
மேலும் பாமக.வில் ஏற்பட்டுள்ள மோதலில் திமுக தந்தை ராமதாஸ்க்கு உதவியாக சில வேலைகளை செய்வதாக சொல்லப்படுகிறது. இதனால் உச்சக்கட்ட எரிச்சலில் இருக்கும் அன்புமணி திமுகவை பாரபட்சமின்றி வெளுத்தெடுத்து வருகிறார். குறிப்பாக வன்னியர் சமுதாயத்திற்கு கடந்த ஆட்சி காலத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு பின்னர் அதனை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் வன்னியர்களுக்கு 15 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் தொடர்ந்து கால தாமதம் ஏற்படுத்தி வரும் திமுக அரசை விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமரவிடாமல் செய்ய வேண்டும். அதுவே எனது ஆசை. விரைவில் அதனை செய்து காட்டுவேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
