Anbumani said 7 ways to change the state of Tamil Nadu as a waste less state
நாட்டிலேயே அதிக குப்பையை உருவாக்கும் மாநிலமான தமிழ்நாட்டை குப்பையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
மக்கள் குப்பையை வகை பிரித்து அளிப்பதன் மூலமும், நகராட்சிகள் மக்களிடம் குப்பையை தரம் பிரித்து பெற்று அவற்றை மறுசுழற்சி செய்தல் மற்றும் மக்க வைப்பதன் மூலம் நகரங்களின் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் திட்டத்தை இந்திய அரசு இந்த ஆண்டு முதல் செயல்படுத்துகிறது.
இந்தியாவிலேயே தனிநபர் அளவில் அதிக குப்பையை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்திய மாநகரங்களில் அதிக குப்பையை உருவாக்கும் மாநகரம் சென்னை.
எனவே, குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தேவை இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு அதிகம் இருக்கிறது.
குப்பை பிரச்சினைக்கு முறையாக தீர்வு காண வேண்டும் என்பது இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கட்டாயம் ஆகும்.
இதனை செயலாக்குவதற்கான ஓராண்டு காலக்கெடு ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. இந்த விதிகள் அனைத்தையும் ஜூன் 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்திய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கழிவு மேலாண்மை குறித்த அனைத்து விதிகளையும் தமிழ்நாடு அரசும் தமிழகத்தின் அனைத்து நகராட்சி அமைப்புகளும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
உலகில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் குப்பைதான் மூலக்காரணாமாக இருக்கிறது.
எனவே, ஜீன் 5, உலக சுற்றுச்சூழல் நாள் முதல் தமிழநாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டை குப்பையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும்.
பொதுமக்கள் குறைந்த பட்சமாக “ஈரக் கழிவு, உலர் கழிவு” என இருவகையாக குப்பையை வகை பிரிக்க வேண்டும்.
ஈரக் கழிவுகளை பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். உலர் கழிவுளை நீல நிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
பிரிக்கப்பட்ட குப்பையை நகராட்சியிடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பாளரிடமோ அளிக்க வேண்டும்.
வீடுகளில் வகை பிரிக்கப்பட்ட குப்பையை வீடுவீடாக சென்று சேகரிக்க நகராட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை என வகையாக பிரித்து தாங்களே குப்பையை மேலாண்மை செய்ய வேண்டும் அல்லது நகராட்சியிடம் அளிக்க வேண்டும்.
மட்கும் குப்பையை தனியே பிரித்து மட்க வைக்க வேண்டும். மறுசுழற்சிக்கு உகந்தவற்றை தனியே பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும். எதற்குமே பயன்படாத குப்பையை மட்டுமே குப்பை மேட்டில் கொட்டி, விதிமுறைப்படி பராமரிக்க வேண்டும்.
நீர் நிலைகள், வடிகால்கள், பொது இடங்கள், சாலைகள் என எந்த ஒரு இடத்திலும் குப்பையை தூக்கி எறிவதும், புதைப்பதும், எரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
இத்தகையை விதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசும் தமிழகத்தின் அனைத்து நகராட்சி அமைப்புகளும் முறையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டினை குப்பையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
