anbumani ramadoss report to against university vice chancellor
குற்றவாளிக்கு பல்கலைகழக துணைவேந்தர் பதவி கொடுப்பதா? என பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 பேரின் பெயர்களையும் ஆளுனர் நிராகரித்து விட்டதாகவும், இனிவரும் காலங்களில் புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன.
இதன் பின்னணியில் சென்னை மற்றும் காமராஜர் பல்கலைக்கழக முறைகேடுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.செல்லத்துரை அந்தப் பதவிக்கு சிறிதும் தகுதியற்றவர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், செல்லத்துரைக்கு கற்பித்தல் அனுபவமே கிடையாது.
செல்லத்துரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். அதன்பின் இளைஞர் மேம்பாட்டு இயக்குனராக பணியாற்றினார்.
2004 மற்றும் 2005 ஆம் ஆண்டு காலத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றிய போது, இவரது செயல்பாடுகளுக்கு பல்கலைக்கழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இவரது செயல்பாடுகளில் கடும் அதிருப்தி அடைந்த அப்போதைய துணைவேந்தர், ஒன்றரை ஆண்டுகளிலேயே இவரை பதவி நீக்கம் செய்தார்.
அதன்பின் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், பின்னர் மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் இவர் பணியாற்றிய போதும் கூட ஆசிரியராக பணியாற்றவில்லை.
துணைவேந்தர் கல்யாணியின் ஊழல்களை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக பாதுகாப்புக்குழுவின் அமைப்பாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான சீனிவாசனை கூலிப்படையை ஏவி, கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(பி), 324, 109, 307 ஆகிய பிரிவுகளில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் செல்லத்துரை தலைமறைவாக இருந்ததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.
இத்தகைய அவலங்களுக்கும், அவப்பெயர்களுக்கும் சொந்தக்காரரான செல்லத்துரையை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்ததன் மூலம் அப்பல்கலைக்கழகத்தின் எதிர்காலமும், கல்வித்தரமும் காவு கொடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள துரைசாமியின் கல்வித்தகுதியில் எந்த குறையும் இல்லை. ஆனால், துரைசாமியை விட தகுதியும், திறமையும் மிக்க பலரின் பெயர்கள் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களை விடுத்து இவருக்கு பதவி வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.
பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க விரும்பும் ஆளுனர் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லையா?
துணைவேந்தர்கள் நியமனத்திற்காக தேர்வுக்குழு அமைப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. துணைவேந்தர்கள் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
எனவே, சென்னை மற்றும் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன், துணைவேந்தர்கள் நியமனம் சட்டத்தில் மேலும் பல பிரிவுகளைச் சேர்த்து தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.
