தமிழ் சினிமாவில் கந்துவட்டிக்கு பணத்தை வாங்கி படமெடுத்து அதை ரிலீஸ் செய்யாமல் தடுமாறி வாங்கிய பணம் வட்டி மேல வட்டி எகிறிக்கொண்டே இருக்கும். படம் வெளியாவதற்குள் அந்த வட்டி குட்டி போட்டு பல்க்காக ஒரு அமௌன்ட்டை கொடுத்தால் தான் படத்தை வெளியாக விடுவோம் என ஒட்டுமொத்தமாக செட்டில் செய்த பிறகே ஒரு படம் வெளியாகும். இதற்க்கெல்லாம் என்ன காரணம்? சொந்த முதலீடு இல்லாமல், திட்டமிடல் இல்லாமல் போனால் என்ன ஆகும் என அசோக்குமாரின் தற்கொலையே சாட்சி.

வட்டிக் கொடுமையை தமிழ்த் திரைப்படத் துறையில் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் திரைப்படத் துறையினரால் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு அன்புச்செழியன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கின் போக்கு திசை மாறியிருக்கிறது.

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென இயக்குநர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது உறவினர் அசோக்குமார் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அசோக்குமார் தன் வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் எனக் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்திருந்தார்.

இது குறித்து, சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன்மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து, கந்து வட்டி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவிட்டு மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

ஆனால், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புச்செழியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். தற்போது, அந்தத் தடையை ரத்து செய்ய வேண்டுமென சசிகுமார் இணைப்பு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை இரண்டு வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். சசிக்குமார் - அன்புச்செழியன் இடையே சமரசம் செய்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் தத்தமது நிலைகளிலிருந்து இறங்கிவரத் தயாராக இல்லை.

கொடுத்த பணத்திற்கு வட்டி தள்ளுபடி செய்ய அன்பு தரப்பு தயாராக இருக்கிறது ஆனால், அசலையே தள்ளுபடி செய்ய வேண்டும் என சசி தரப்பு அடம்பிடிக்கிறது. தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அன்புச்செழியனுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அன்புச்செழியன் இந்தத் தடை ஆணை பெற்ற பின் திரையுலகில் தனக்கான செல்வாக்கைத் தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தனது ஆதரவாளரும் விசுவாசியுமான அருள் பதியை சமீபத்தில் நடைபெற்ற சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வைத்து தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் பொறுப்பில் அருள்பதியைத் தொடரச்செய்தார். இதன் மூலம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு, விநியோகத் துறை தன் ஆதிக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார் அன்புச்செழியன்.

சசிக்குமார் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நேரத்தில் சென்னையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சசிக்குமார் தன்னிடம் படத் தயாரிப்புக்காகப் பெற்ற 18 கோடி ரூபாயை அசலும் வட்டியும் இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை. எனவே அந்த பணத்தை வசூல் செய்து தர அன்புச்செழியன் கொடுத்த புகார் தற்போது விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

இது விஷயம் குறித்து சசியை அழைத்துப் பேசுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் இறுதி கட்டத்தை எட்டும் வரை அவர் தயாரிக்கும், நடிக்கும், இயக்கும் படங்களை வியாபாரம் செய்யத் தடை போடப்பட்டுள்ளதாம். இம்முடிவு தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுத்து சசிகுமாரை முடக்க நினைப்பதாக கோடம்பாக்கம் முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது.