சென்னை மெட்ரோ இரயில் வழித்தடம் 3-ல் 12 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058.20 கோடி மதிப்பில் 3 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக செல்ல முடிகிறது. இதனால் பேருந்து மற்றும் வாகனங்களில் நெரிசலில் சிக்காமல் உரிய இடத்திற்கு செல்ல முடிகிறது. இந்தநிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடுத்த கட்டமாக 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் C3-CP03-UG- 03. C3-CP04-UG04 மற்றும் C3-CP05-UG05 ஆகிய பிரிவில் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு ரூ.4058.20 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு 20.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. C3-CP03-UG-03 பிரிவிற்கான மதிப்பு ரூ.1730.60 கோடி. C3-CP04-UG04 பிரிவிற்கான மதிப்பு ரூ. 1461.97 கோடி மற்றும் C3-CP05-UG05 பிரிவிற்கான மதிப்பு ரூ.865.63 கோடி என மூன்று ஒப்பந்தங்கள் மொத்தம் ரூ.4058.20 கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் - 2 வழித்தடம் 3-60 வழங்கப்பட்டுள்ள இந்த மூன்று ஒப்பந்தங்களும் கீழ்ப்பாக்கம் மெட்ரோவில் இருந்து தரமணி வரை 12 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைபதற்கான அனைத்து வகையான பணிகளும் மற்றும் 4 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற கட்டுமான பணிகளை உள்ளடக்கியது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி. அர்ச்சுனன் திட்டங்கள்) மற்றும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.