தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த கோயிலில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா நடந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கோயில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கோயிலில் ஐம்பொன்னால் இருந்த துர்க்கை அம்மன் சிலையை திருடினர். மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையையும் எடுத்து கொண்டனர். இன்று காலை கோயிலுக்கு வந்த கிராம மக்கள், கதவு உடைக்கப்பட்டு, அம்மன் சிலை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொள்ளை போன அம்மன் சிலை 3 அடி உயரம் கொண்டதாகும். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. 

தகவலறிந்து ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.  தடயவியல் நிபுணர்களும் வந்து சோதனை நடத்தினர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே கோயிலில் விநாயகர் சிலை கொள்ளை போனது. இந்நிலையில் தற்போது துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலையும் கொள்ளை போனதால், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.