ஒரே மேடையில் ஸ்டாலின் - அமித் ஷா: உச்சகட்ட பரபரப்பு!
ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்வு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் பங்கேற்பர். கடந்த ஆண்டு 30ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கேரளாவில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அடுத்த முறை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மத்திய அமைச்சரவை மாற்றம்: யார் பதவிக்கு வேட்டு? வருண் காந்திக்கு சீட் மறுப்பு?
அதன்படி, தென்மண்டல கவுன்சிலின் 31ஆவது கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. மாநிலங்கள் இடையே சுமூக உறவை ஏற்படுத்துவது, மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக ஆலோசிப்பது உள்ளிட்டவைகளை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநில உரிமைகள் மீது விட்டுக் கொடுக்காத நிலைப்பாட்டில் உள்ள திமுக அரசு, மத்திய பாஜக அரசுடன் சுமூகமான போக்கையே கையாண்டு வருகிறது. ஆனால், அண்மைக்காலமாகவே ஆளுநர் ரவியின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுப்பது தொடங்கி பல்வேறு விஷயங்களில் பாஜக - திமுக இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் எதிர்க்கட்சிகள் அணியில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இந்த நிலையில், ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்வு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் மாநில சுயாட்சி குறித்து ஆழமான கருத்துகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரங்கள் தொடர்பாக இரு மாநில உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்தும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் ஸ்டாலின் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கர்நாடக சார்பில் அம்மாநில முதல்வரும் கலந்து கொள்வார் என்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.