Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்? மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்கும் கே.எஸ்.அழகிரி!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்திக்கவுள்ளார்

Amid tamilnadu congress chief row ks alagiri to meet mallikarjun kharge
Author
First Published Aug 18, 2023, 4:23 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிடியின் தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அக்கட்சி கணிசமான இடங்களை பெற்றது. 

வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளை தமிழ்நாட்டில் பெற்றதால், கே.எஸ்.அழகிரியை மாற்ற டெல்லி தலைமைமை பரிசீலிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட அக்கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், புதுச்சேரி, டெல்லி, குஜராத், ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சிறிய மறு சீரமைப்பை மேற்கொண்டது. மேலும் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களிலும் புதிய பொறுப்பாளர்களை அக்கட்சி மேலிடம் நியமித்தது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்றும் பரிசீலனையில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோஷ்டி அரசியலுக்கு பெயர் பெற்ற தமிழக காங்கிரஸில் இருக்கும் முன்னாள் தலைவர்கள், இந்நாள் இளம் தலைவர்கள் என பலரும் கே.எஸ்.அழகிரியை மாற்றி விட்டு தங்களை நியமிக்க வேண்டும் என டெல்லிக்கு கடந்த சில மாதங்களாக நேரடியாகவே அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த அழுத்தங்கள் திரைமறைவில் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், வெளிப்படையாகவே கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் டெல்லி மேலிடமோ இதற்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஒன்று கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் அல்லது தேர்தல் முடியும் வரை அவரே நீடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைமை இந்த விஷயத்தில் மவுனமே காத்து வருகிறது. அதற்கு, முடிவெடுப்பதில் உள்ள சிக்கலே காரணமாக கூறப்படுகிறது. புதிய தலைவர் மாற்றம் தொடர்பாக ஏற்கனவே விளக்கமளித்துள்ள கே.எஸ்.அழகிரி,  யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்புள்ளது, நானே தொடரவும் வாய்ப்புள்ளது என்றவர், அண்மையில் டெல்லியில் முகாமிட்டு மூத்த தலைவர்களை சந்தித்து பேசி திரும்பினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை, கார்த்தி சிதம்பரம், கரூர் எம்.பி., ஜோதிமணி, கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிடி மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரது பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

Actor Vijay: திடீரென திருமாவளவனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன பேசினார் தெரியுமா? வெளியான தகவல்..!

இதில், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் ஆகியோரது பெயர்கள் ரேஸில் முன்னனியில் இருப்பதாக தெரிகிறது. ஆனால், செல்வப்பெருந்தகையை நியமிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரும்புவதாகவும், அதற்கு ராகுல் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, செல்வப்பெருந்தகை மீது புகார் ஒன்று காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று மாலை 6 மணியளவில் சந்திக்கவுள்ளார். அப்போது, காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் தன்னை தொடர அனுமதிக்கும்படி அவர் கோர உள்ளதாக தெரிகிறது. அவருடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ. க்களும் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து அழகிரிக்கு ஆதரவாக பேசவுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தலைவரை மாற்றினால் அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டணி உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் பின்னடைவு ஏற்படும். எனவே, கே.எஸ்.அழகிரியை மாற்றும் முடிவை மேலிடம் எடுத்திருந்தால் அதனை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கவுள்ளதாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios