அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரும் பதற்றம் நிலவுகிறது.
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தொடர்ந்து 21 மணி நேரத்துக்கு மேலாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் இன்று காலை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

240க்கும் மேற்பட்டோரை மண்டபத்தில் இருந்து வெளியேறும்படி போலீசார் கூறினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்தாலும், அதை வாங்க மறுத்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனா. அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறாமலும், உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமலும் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் திடமாக உள்ளனர். அதுவரை உணவு சாப்பிட போவதில்லை என தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை தங்களது மறியல் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.மதுரை மாவட்டம் மேலூரில் 3வது நாளாக இன்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும் என்றனர்.

சென்னையில் விவேகானந்தர் இல்லம் முன் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மற்றும் மதுரையிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்ட களத்தில் இறங்கினர்.
மதுரை, சேலம், சென்னையை தொடர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரி திருச்சியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் கல்லூரி மாணவர்கள் மவுன போராட்டம் நடத்தினர்.

அதேபோல் புதுக்கோட்டையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரி வன்னியன் விடுதியில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரி கோபிச்செட்டிப்பாளையம் பெரியார் திடலில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
