காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
காவிரி நதி நீர் பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கோட்டையில் சந்தித்து கொடுத்தார்.
அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வலியுறுத்தினார். 10 நாட்கள் ஆகியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து விவசாய சங்க தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை திமுக சார்பில் கூட்ட எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, தமாகா, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அவரது அழைப்பை ஏற்று காங்கிரஸ், த.மா.கா, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
