சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் ஏராளமான செய்தியாளர்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர்.

உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்ட அதிகார்கள், அங்குள்ள அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து, மதியம் சுமார் 12 மணியளவில், ராமமோகன் ராவ் வீட்டுக்கு துணை ராணுவ படையினர் வந்தனர். ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினருடன், தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை முதல் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டின் முன்பு, குவிக்கப்பட்டுள்ள போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள், பொதுமக்களை காண்பித்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் என பலரிடமும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இன்று அதிகாலை 5 மணியளவில் ராமமோகன் ராவ் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறையினர், தீவிர சோதனை நடத்தி கொண்டு வருகின்றனர். காலை 9 மணிக்கு மேல், அவரது வீட்டில் வேலை செய்பவர்கள் அங்கு வந்தனர். அப்போது, அவர்களை அங்கிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அப்போதுதான், ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி கொண்டிருப்பது தெரியவந்தது.

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. ஆனால், அதுப்பற்றி அதிகாரிகள் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

தலைமை செயலாளர் பதவி, அரசு நிர்வாகத்தில் மிகவும் உயர் பதவியாகும். இதுபோன்ற பதவிகளில் உள்ளவர்களின் வீடுகளில் எளிதாக சோதனைகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், ராமமோகன் ராவின் வீட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவது பெரும்பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில், திடீர் சோதனை நடக்கும் சம்பவத்தை அறிந்ததும் அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை தொடர்ந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது.